குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்த மாதம்பட்டி ரங்கராஜ்: திருமணம் மிரட்டலால் நடந்தது, பணம் பறிக்கும் நோக்கம் – அறிக்கையால் பரபரப்பு!
சமையல் கலை நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா முன்வைத்த 'குழந்தையின் தந்தை நான் தான் என ஒப்புக்கொண்டார்' என்ற குற்றச்சாட்டுக்கு ரங்கராஜ் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இரு தரப்பு வாக்குவாதங்களும் மற்றும் குற்றச்சாட்டுகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மாதம்பட்டி ரங்கராஜுடனான உறவில் தனக்குப் பிறந்த ஆண் குழந்தைக்குத் தந்தையை மறைத்துவிட்டதாகக் கூறி அவர் மீது ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். சமீபத்தில் மகளிர் ஆணையத்தில் நடந்த விசாரணையைத் தொடர்ந்து, அவர் பின்வரும் தகவலை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டிருந்தார்: தன்னை இரண்டாவது திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார்.
எனது குழந்தையின் தந்தை நான் தான் என ரங்கராஜ் ஒப்புக் கொண்டதால், டி.என்.ஏ ஆதாரங்கள் தேவையில்லை என்றும், வழக்கு முடியும் வரை குழந்தை பராமரிப்புக்கு மறுக்கக் கூடாது என்றும் மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்து மாதம்பட்டி ரங்கராஜ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய விவரங்கள். மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை. நான் ஜாய்யை தன்னிச்சையாக (under free will) திருமணம் செய்துகொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை.
ஜாய், தன்னைப் பற்றி அவதூறு செய்யப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டியதால், இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு நடந்தது. இந்தத் திருமணம் என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தின் புலனாய்வு அதிகாரி முன்பும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் செப்டம்பர் 2025-இல் அளித்த வாக்குமூலங்களில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.
மகளிர் ஆணையத்தின் முன் நடந்த விசாரணையின்போது, ஜாய் தனக்கு மாதத்திற்கு ₹1,50,000 பராமரிப்புத் தொகையாகவும், தனது பி.எம்.டபிள்யூ (BMW) காருக்கு ₹1.25 லட்சம் மாதாந்திர இ.எம்.ஐ.யையும் செலுத்த வேண்டும் என்று கோரினார். தான் அந்தக் கோரிக்கையை மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நான் ஒருபோதும் டி.என்.ஏ பரிசோதனையை மறுத்ததில்லை. அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக் கொள்வேன் என்றும் ஏற்கனவே வாக்குமூலம் அளித்துள்ளேன்.
மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை. அந்தப் பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன், என்றும் உண்மையைக் காவல்துறை மூலம் நிரூபிக்க அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பேன் என்றும் ரங்கராஜ் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தின் உண்மைத் தன்மை, நீதிமன்றத்தின் அடுத்தகட்ட விசாரணையில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
