உச்ச நீதிமன்ற வழக்கு முடியும் வரை: தாயையும், குழந்தையையும் பராமரிக்க மாதம்பட்டி ரங்கராஜுக்கு மகளிர் ஆணையம் ஆணை!
நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது அவருடைய மனைவி என்று கூறப்படும் ஜாய் கிரிசில்டா கொடுத்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய மாநில மகளிர் ஆணையம், விசாரணையின் முடிவில் சில முக்கிய உத்தரவுகளையும் பரிந்துரைகளையும் வெளியிட்டுள்ளது.
மாநில மகளிர் ஆணையத்தின் விசாரணையில், நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் பின்வரும் உண்மைகளை ஒப்புக்கொண்டதாக ஆணையம் அறிவித்துள்ளது. ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்துகொண்டதை மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக்கொண்டார். ஜாய் கிரிசில்டாவுக்குப் பிறந்த குழந்தைக்குத் தான்தான் தந்தை என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டார். மகளிர் ஆணையத்தின் உத்தரவுகள் மற்றும் பரிந்துரைகள்:ரங்கராஜ் தனது திருமண உறவையும், தந்தை பொறுப்பையும் ஏற்றுக்கொண்ட நிலையில், மகளிர் ஆணையம் பின்வரும் முக்கியமான முடிவுகளை வெளியிட்டுள்ளது.
ஜாய் கிரிசில்டா மற்றும் குழந்தையைப் பராமரிக்கும் முழுப் பொறுப்பும் மாதம்பட்டி ரங்கராஜுக்கு உண்டு. இது உரிமையியல் நீதிமன்றத்தில் (Civil Court) தீர்க்கப்பட வேண்டிய விவகாரம் என்றாலும், வழக்கு விசாரணை முழுமையாக முடியும் வரை குழந்தையைப் பராமரிக்க மறுக்கக் கூடாது. நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்குமாறு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பிரிவின் துணை ஆணையருக்கு (Deputy Commissioner, Crime Against Women and Children Wing) மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்த அதிரடி உத்தரவின் மூலம், நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ், திருமண உறவையும், குழந்தையின் பராமரிப்புச் செலவையும் உடனடியாக ஏற்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
