முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது; வேலூரில் கருவேல மரங்களை அகற்ற அறிவுறுத்தியுள்ளேன் – அமைச்சர் துரைமுருகன் பேட்டி!
தி.மு.க. அரசை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது குறித்து, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் காட்பாடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அதிரடியான பதிலடி கொடுத்துள்ளார். தி.மு.க.வுக்குத் தெரிந்தது அஞ்சாமையும் நேர்மையும் மட்டும்தான் என்றும், மற்றவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் வேறு என்றும் அவர் வலியுறுத்தினார்.
முல்லைப் பெரியாறு அணை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "யார் எப்படிச் சொன்னாலும் முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. பல்வேறு வல்லுநர்கள் அணையை ஆய்வு செய்து பலமாக உள்ளது என்று ஏற்கனவே சான்றளித்துள்ளனர். இதெல்லாம் ஒரு நாடகம் தான்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அதேபோல், ஆறுகளில் உள்ள கருவேல மரங்களை அகற்றுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "தமிழகத்தில் உள்ள எல்லா ஆறுகளிலும் கருவேல மரங்கள் தான் உள்ளது. அதை அகற்றுவது என்பது மிகப் பெரிய பிரளயம். அதனை வெட்ட வேண்டும், எடுத்துக்கொண்டு அப்புறப்படுத்த வேண்டும். இதற்குக் போதுமான நிதி ஆதாரங்கள் இல்லை. இருந்தாலும், வேலூரில் கருவேல மரங்களை அகற்றிச் சுத்தமாக வேண்டும் என அறிவுறுத்தி உள்ளேன்" என்று கூறினார்.
பாலாற்றில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், "பாலாற்றில் ஆங்காங்கே பல பகுதிகளில் குப்பைகளை எடுத்து வந்து கொட்டி விடுகிறார்கள். குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு ஒரு பொது மனசாட்சி இருக்க வேண்டும். எங்கு குப்பை சேர்ந்தாலும் அதனை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து பாலாற்றில் கொட்டி விடுகிறார்கள். அதைக் தடுக்கக் கடுமையான சட்டம் இருந்தால் மட்டுமே குப்பைகளைக் கொட்டுவதைத் தடுக்க முடியும்" என்று கருத்துத் தெரிவித்தார்.
"எஸ்.ஐ.ஆர்.ஐ குறித்து தி.மு.க. பதறுகிறது, அலறுகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, பா.ஜ.க.வுக்கு நல்ல வக்காலத்து வாங்குகிறார். பா.ஜ.க.வின் ஆசீர்வாதம் அவர்களுக்குக் கிடைக்கட்டும். 'அலருது', 'பதறுது' என்பது எல்லாம் அவர்களுக்குத் தெரிந்த வார்த்தைகள். எங்களுக்குத் தெரிந்த வார்த்தைகள் அஞ்சாமையும் நேர்மையும் தான்" என்று சூடாகப் பதில் அளித்தார். மேலும், "எங்களுக்கும் அவர்களுக்கும் ஏற்பவே முடியாது. என்னென்ன செய்யலாம் என்பதை ஆயிரம் முறை விளக்கி விட்டேன். அப்பவும் அவர்கள் மண்டையில் ஏறவில்லை என்றால் என்ன செய்வது?" என்று கூறிவிட்டுப் பேட்டியை முடித்துக் கொண்டார்.
