தற்கொலைப்படைத் தாக்குதல் அல்ல: முழுமை பெறாத நிலையில் வெடித்த கார் குண்டு! – பதட்டத்தில் நிகழ்ந்த சம்பவமா?
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் வெடித்துச் சிதறிய சம்பவம் குறித்துப் போலீசார் மற்றும் தேசியப் புலனாய்வு முகமை (NIA) நடத்திய விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில் இது தற்கொலைப்படைத் தாக்குதலாக இருக்குமோ என்று சந்தேகம் எழுப்பப்பட்ட நிலையில், இந்தச் சம்பவம் பதட்டத்தினால் நிகழ்ந்ததாக விசாரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரிகள் தெரிவித்த தகவல்களின்படி, வெடிப்பு நிகழ்ந்த காரில் இருந்த குண்டு முழுமையாகத் தயாராக இல்லாமல், தயாரிப்பு நிலையிலேயே இருந்துள்ளது. மேலும், வெடிகுண்டிலிருந்து அதிகமான உயிர்களைப் பலி ஏற்படுத்தும் நோக்குடன் பயன்படுத்தப்படும் ஆணிகள், வயர்கள் போன்றவை கைப்பற்றப்படாததால், இந்த வெடிப்பு அதிகமான உயிர்பலியை இலக்காகக் கொள்ளவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து வெடிமருந்துப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வரும் சூழலில், இந்தச் சம்பவம் பதட்டத்தில் நடந்திருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. குறிப்பாக, வெடிகுண்டை வெடிக்கச் செய்த நபர், தற்கொலைப்படைத் தாக்குதல்களில் செய்யப்படும் வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதால், இது அந்த இடத்தையே குறிவைத்த பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என்றும் விசாரணை கூறுகிறது.
இதன் மூலம், முழுமையாகத் தயாரிக்கப்பட்டு, வேறு இடத்தில் பெரிய அளவில் வெடிக்க வைக்கத் திட்டமிடப்பட்டிருந்த ஒரு பெரும் சதித்திட்டம், இந்த முன்கூட்டிய வெடிப்பின் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் குறித்த விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
.jpg)