2026-ல் திமுக Vs தவெக போட்டி தான்: விஜய் கருத்தை அமோதித்த டிடிவி தினகரன்; வெற்றி பெறுபவருடன் தான் கூட்டணி!
நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது குறித்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரபரப்பான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கும், விஜய்யின் தவெக கூட்டணிக்கும் இடையேதான் பிரதான போட்டி இருக்கும் என அவர் ஆருடம் கூறியுள்ளார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற தவெக பொதுக்குழுவில் பேசிய விஜய், 2026-ல் இரண்டே இரண்டு கட்சிக்குத் தான் போட்டியே ஒன்று தவெக, இன்னொன்று திமுக என்று தெரிவித்திருந்தார். விஜய்யின் இந்தக் கருத்தை அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்த்த நிலையில், டிடிவி தினகரன் அதை உறுதிப்படுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், நான் தவெக-வுடன் கூட்டணி வைப்பதற்காக இதைச் சொல்லவில்லை. யதார்த்தமாக, சாதாரண குடிமகனாகப் பதில் சொல்கிறேன். விஜய் தலைமையில் சரியான கூட்டணி அமைந்தால் கடுமையான போட்டி நிலவும் என்று ஆருடம் கூறினார்.
விஜய்யின் வருகையால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்குத் தள்ளப்படும் என்றும் அவர் கணித்துள்ளார்.
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அமமுக ஏற்கனவே வெளியேறியுள்ள நிலையில், டிடிவி தினகரனின் இந்தக் கருத்து, அவர் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா என்ற ஊகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி குறித்துச் சில கட்சிகள் தன்னை அணுகியதாகவும், ஆனால் வெற்றி பெறும் கட்சியுடன் தான் தனது கூட்டணி இருக்கும் என்றும், இதுகுறித்துத் தான் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.
எடப்பாடி பழனிசாமியை (இபிஎஸ்) கடுமையாக விமர்சித்த அவர், இபிஎஸ் உடன் நான் சேர்வதற்கான வாய்ப்பே இல்லை. என்றுமே டிடிவி தினகரன், இபிஎஸ்-க்கு சிம்ம சொப்பனம்தான். துரோகத்தை வீழ்த்தாமல் யார் தடுத்தாலும் நான் ஓயமாட்டேன் என்று தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
முன்னதாக, தவெக பொதுக்குழுவில் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய விஜய், உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் தலையில் ஓங்கி நறுக்கு நறுக்கு நறுக்கு என்று குட்டியதை முதல்வர் மறந்துவிட்டாரா?" என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
