இந்தியப் பள்ளிகளிலும் 'துப்பாக்கி கலாச்சாரம்'? சக மாணவனைச் சுட்ட 11-ஆம் வகுப்பு மாணவன் – ஹரியானாவில் பதற்றம்!
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில், 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், தன் சக மாணவனைத் தனது தந்தையின் உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியால் கொடூரமாகச் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த மாணவன் உயிருக்குப் போராடி வரும் நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் உட்பட இரண்டு சிறுவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு செக்டார் 48 பகுதியில் உள்ள வாடகை குடியிருப்பில் இச்சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட 17 வயது மாணவனின் கழுத்துப் பகுதியில் குண்டு பாய்ந்த நிலையில், மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் அளித்த புகாரின்படி, துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவனுக்கும், பாதிக்கப்பட்ட மாணவனுக்கும் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு பள்ளியில் ஒரு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தின் காரணமாக, துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் தன் மனதில் பழிவாங்கும் உணர்வை வளர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று, முக்கியக் குற்றவாளியான மாணவன், தன் நண்பனுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட மாணவனைச் சந்திக்க அழைத்துள்ளான். நண்பனின் வற்புறுத்தலால் கேர்கி தவுலா சுங்கச்சாவடி அருகே வந்த மாணவனை, இருவரும் அங்கிருந்து செக்டார் 48-இல் உள்ள தங்கள் வாடகை வீட்டிற்குக் கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு நடந்த வாக்குவாதத்தின்போது, வீட்டிலிருந்த தன் தந்தையின் கைத்துப்பாக்கியை எடுத்து, சக மாணவனைச் சுட்டுக் கொலை செய்ய முயற்சித்துள்ளான். சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே, துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் மற்றும் அவனது இன்னொரு நண்பன் என இரண்டு சிறுவர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து கைத்துப்பாக்கி, ஒரு மேகசின், ஐந்து தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
குற்றம் சாட்டப்பட்ட மாணவனின் வீட்டில் இருந்து மேலும் ஒரு மேகசின் மற்றும் 65 தோட்டாக்கள் அடங்கிய பெட்டியும் கைப்பற்றப்பட்டது. இந்தத் துப்பாக்கி, ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் மாணவனின் தந்தைக்கு உரிமம் வழங்கப்பட்டது ஆகும். உரிமம் பெற்ற ஆயுதங்களைக் குழந்தைகளிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் வைக்க வேண்டும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட சாதாரண சண்டை, துப்பாக்கிச் சூடு வரை சென்றிருப்பது, இந்திய சமூகத்தில் ஆயுதங்களின் பயன்பாடு மற்றும் பாதுகாப்பின்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இது அமெரிக்கப் பள்ளிகளில் காணப்படும் 'துப்பாக்கி கலாச்சாரத்தின்' ஆரம்ப அச்சுறுத்தலாக இருக்குமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
