தீவட்டிபட்டி போலீசார் ஜாதிய வன்கொடுமை சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு; சிறுவன் மருத்துவமனையில் அனுமதி!
சேலம், அக்டோபர் 15: சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள கொங்குபட்டியில், விவசாய நிலத்தின் ஓரம் மலம் கழித்ததாகக் கூறி, 15 வயது பட்டியலினச் சிறுவனை ஒரு விவசாயி தாக்கி, அந்த மலத்தை அள்ளச் சொன்ன கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விவசாயி மீது ஜாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொங்குபட்டியில் வசிக்கும் மோகன் என்பவரது விவசாய நிலத்தை ரமேஷ் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றார்.அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் மகன் பவித்ரன் (15) என்ற சிறுவன், இன்று காலை ரமேஷின் விவசாய நிலத்தின் ஓரம் மலம் கழித்துள்ளார். இதனைக் கண்ட குத்தகை விவசாயி ரமேஷ், சிறுவன் பவித்ரனை கடுமையாகத் தாக்கியதுடன், சிறுவன் இருந்த மலத்தை அள்ளச் சொல்லியும் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தை அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாகச் சிறுவன் பவித்ரனை மீட்டு, ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் கொடூரச் செயலில் ஈடுபட்ட விவசாயி ரமேஷ் மீது தீவட்டிபட்டி போலீசார், ஜாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் அவனது பெற்றோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.