முதலீட்டில் அரசியல் காழ்ப்புணர்ச்சி வேண்டாம்: ஃபாக்ஸ்கான் ஒப்பந்தம் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதில்!
15,000 கோடி முதலீடு, 14,000 வேலைவாய்ப்புகள் 100% உண்மை: 'குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை இளைஞர்களின் எதிர்காலத்தில் கொட்டாதீர்கள்' எனச் சாடல்!
சென்னை, அக்டோபர் 15: ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்து வேலைவாய்ப்பை உறுதி செய்ததாக வெளியான செய்தி குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்குப் பதில் அளிக்கும் வகையில், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அவர்கள் இன்று (அக். 15) தனது எக்ஸ் (X) தளத்தில் கடுமையான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முதலீடு உறுதி செய்யப்பட்டது 100% உண்மை என வலியுறுத்திய அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகச் சிலர் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பில் விளையாடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் பதிவில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு எப்போதெல்லாம் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டு நல்லது நடக்கிறதோ அப்போதெல்லாம் சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணத்தினால் அந்த வேலைவாய்ப்பில் விளையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அப்படி ஒருவர் தனது குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தில் கொட்டித் தீர்க்கிறார்.
இன்றைய உலக அரசியல் சூழலில் ஒரு முதலீட்டை இந்தியாவிற்குள் கொண்டுவருவது எவ்வளவு கடினம்! அதிலுள்ள Geopolitical issues என்னென்ன என்பதையெல்லாம் அறிந்துகொள்ளாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி மிகுந்த சிறுபிள்ளைத்தனமான அறிக்கையை வெளியிடுவதை இனி அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
ஃபாக்ஸ்கான் திட்டம் உறுதி:
நேற்று ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் 15,000 கோடி முதலீடு செய்து 14,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்தது என்பது உறுதியான, சரியான, எந்தவித தவறும் இல்லாத 100/100 உண்மையான செய்தி. இது ஏறத்தாழ ஒரு வருடப் போராட்டத்திற்குப் பிறகு உறுதி ஆகியிருக்கும் வேலைவாய்ப்புகள்.
பல மாதங்களாக ஒரு சில ஊடகங்கள் அரசு எந்தவித MoU செய்தியையும் உறுதிசெய்யாத சூழலில் அவர்களாக யூகித்து எழுதிய செய்திகளை 'பழைய திட்டம்' என்று கூறுவது ஏற்புடையதல்ல. ஒரு திட்டம் வேலை வாய்ப்புகளாக மாறும் என்று அரசுக்கு முழுமையான நம்பிக்கை வந்த பிறகே அதைத் துறையோ அல்லது நானோ உறுதிசெய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.
நடப்பு உலகளாவிய வர்த்தக சூழல் தெரியாமல்... அல்லது புரிந்துகொண்டே நடிப்பவர்களுக்கு நாம் எதையும் சொல்ல முடியாது, என்று கூறி தனது கருத்தை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நிறைவு செய்துள்ளார்.