சட்டவிரோதப் பதிவு சர்ச்சையில் ஆதவ் அர்ஜூனா மீது வழக்குப்பதிவு; நிர்வாகிகளைத் தேடும் பணி தீவிரம்!
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில், கரூர் போலீசார் த.வெ.க. தேர்தல் மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் அலுவலகத்திற்கு வந்து, முக்கிய வீடியோ காட்சிகளைக் கேட்டு கடிதம் அளித்துள்ளனர்.
வீடியோ காட்சிகளைக் கேட்டு கடிதம்
போயஸ் கார்டனில் உள்ள ஆதவ் அர்ஜூனாவின் அலுவலகத்திற்கு கரூர் போலீசார் வந்துள்ளனர். குறிப்பாக, அவர்கள் அளித்த கடிதத்தில், கரூர் தேர்தல் பரப்புரையின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் மற்றும் சிசிடிவி (CCTV) காட்சிகளை வழங்கக் கோரியிருந்தனர்.
ஆதவ் அர்ஜூனா தனியாக ஐடி விங் (IT Wing) வைத்துள்ளதால், அந்தப் பிரிவு எடுத்த காட்சிகள், மற்றும் விஜய் சென்ற கேரவனில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கேட்டுள்ளனர். ஆதவ் அர்ஜூனா அலுவலகத்தில் இல்லாததால், அவரது உதவியாளர் அந்தக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், த.வெ.க. ஐடி விங், தொலைக்காட்சி சேனல்கள், யூடியூபர்கள், தனிநபர்கள் என அன்றைய தினம் எடுக்கப்பட்ட அனைத்து வீடியோ காட்சிகளையும் கேட்டு காவல்துறை கடிதம் அளித்து வருகிறது.
தற்போது, ஆதவ் அர்ஜூனா அலுவலகத்திற்கு வந்து வழக்கறிஞருடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
ஆதவ் அர்ஜூனா மீது வழக்குப்பதிவு
இந்தச் சம்பவத்தின் பரபரப்புக்கு மத்தியில், ஆதவ் அர்ஜூனா நேற்று தனது 'எக்ஸ்' வலைதளத்தில் 'இளைஞர்களின் புரட்சிதான் ஒரே வழி' என்ற கருத்தை முன்வைத்து பதிவிட்டு, பின் அதனை நீக்கிவிட்டார். இந்தப் பதிவு, "நேபாளம் மற்றும் இலங்கை போல போராட்டம் வெடிக்கும்" என்ற தொனியில் இருந்ததாகக் கூறப்பட்டு சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. இது தொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகார் அடிப்படையில், சென்னை சைபர் கிரைம் போலீசார் ஆதவ் அர்ஜூனா மீது வழக்குப்பதிவு செய்து, சட்ட நிபுணர்களின் ஆலோசனையைக் கோரி உள்ளனர்.
நிர்வாகிகள் தேடல் தீவிரம்
கரூர் உயிரிழப்பு தொடர்பாக ஏற்கனவே த.வெ.க. மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகி நிர்மல் குமார் உள்ளிட்டோரைத் தனிப்படை அமைத்துக் காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது.
