கோடிக்கணக்கான சொத்துகளை முடக்கும் பணி தீவிரம்; மூளையாகச் செயல்பட்ட சாமிநாதனிடம் விசாரணை!
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இரிடியம் மோசடி வழக்கில் மேலும் 24 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளதாக சிபிசிஐடி (CBCID) போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்
இரிடியம் மோசடி வழக்கில் முன்னர் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி 30 நபர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்திருந்தனர். இவர்களிடமிருந்து லட்சக்கணக்கான பணம், தங்க நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் மூளையாகச் செயல்பட்ட சாமினாதனை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரித்தபோது, பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின:
மோசடிப் பணத்தில் சென்னை மற்றும் மதுரையில் வீடு மற்றும் நிலங்களை வாங்கியுள்ளார். கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளார். சில துணை நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சாமிநாதன் அளித்த தகவலின் அடிப்படையில்தான் தற்போது மேலும் 24 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
பணத்தைப் பதுக்கிய சிண்டிகேட் தலைவன்
இந்த மோசடியில் 50-க்கும் மேற்பட்ட சிண்டிகேட் கும்பல் ஈடுபட்டிருப்பது தெரியவந்ததை அடுத்து, போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மோசடி செய்யப்பட்ட பணத்தை ஒரு சிண்டிகேட் தலைவனிடம் கொடுத்திருப்பதாக வாக்குமூலம் கிடைத்திருப்பதால், அவரை கைது செய்யக்கூடிய பணியில் சிபிசிஐடி போலீசார் மும்முரம் காட்டி வருகின்றனர்.
சொத்துகள் முடக்கம்
மோசடி செய்த பணத்தில் வாங்கிய சொத்துகள் மற்றும் நிலங்களை முடக்கக்கூடிய பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், இந்த மோசடி கும்பலுக்குச் சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கக்கூடிய நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இவ்வழக்கில் அடுத்தடுத்துப் பல நபர்கள் சிக்குவார்கள் எனவும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
