தொழிலுக்காக வந்த பெங்காலிகள் கோவையில் கொண்டாட்டம்; 5 நாட்களில் 10,000 பேருக்கு உணவு வழங்கல்!
மேற்கு வங்காள மக்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த பண்டிகையான துர்கா பூஜை, தற்போது தொழிலுக்காகக் கோவைக்கு இடம்பெயர்ந்து வந்துள்ள பெங்காலி சமூகத்தினரால் கோவையில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கொல்கத்தாவில் கொண்டாடப்படுவது போலவே, சிறப்பு அரங்கம் அமைத்து இந்தப் பூஜை களை கட்டியுள்ளது.
நவமியில் சிறப்புப் பூஜைகளும், நிகழ்ச்சிகளும்
தொடர்ந்து ஐந்து நாட்கள் கொண்டாடப்பட்டு வரும் துர்கா பூஜையின் நவமி நாளான இன்று, காலை முதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், பெங்காலி மொழி பேசும் வட மாநிலப் பெண்கள் பாரம்பரிய நடனங்களை ஆடி அம்மனை வழிபட்டனர். மேலும், பலர் மந்திரங்களைக் கூறிப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
பிரம்மாண்ட ஏற்பாடுகள்: கொல்கத்தாவிற்குச் செல்ல முடியாதவர்கள் ஒன்று சேர்ந்து கோவையில் இந்தக் கொண்டாட்டத்தை நடத்தி வருகின்றனர். கொல்கத்தாவில் இருந்து பிரத்யேகமான ஆர்கெஸ்ட்ரா வரவழைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகள்: இன்று காலையில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இரவில் நெருப்பு நடனம் உள்ளிட்ட பல கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
உணவு உபசரிப்பு
இக்கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக, கொல்கத்தாவில் இருந்து உணவு தயாரிப்பதற்காகப் பிரத்தியேகமான சமையல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து நாட்களில் மட்டும் பூஜைக்கு வந்த 10,000 பேருக்கு உணவு வழங்கப்பட்டிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இந்தப் பூஜையில், பெங்காலி மக்கள் மட்டுமின்றி, கோவையைச் சேர்ந்த பல பொதுமக்களும், கல்லூரி மாணவ-மாணவியரும் வந்து துர்க்கை அம்மனை வழிபட்டுச் செல்வது குறிப்பிடத்தக்கது.
