கோத்தகிரியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளி மர்ம மரணம்: கணவரே மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்றது அம்பலம்! Migrant Worker Murder in Kothagiri: Husband Arrested for Strangulation

சண்டையில் விபரீதம்; சத்தீஸ்கரைச் சேர்ந்த வடமாநிலத் தொழிலாளி கைது!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள தனியார் தேயிலைத் தொழிற்சாலை வளாகத்தில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட 33 வயது மதிக்கத்தக்க வடமாநிலப் பெண் தொழிலாளி வழக்கில், அவரது கணவரே மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்றது கோத்தகிரி காவல்துறையினரின் தீவிர விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் மற்றும் ஆரம்பக் கட்ட தேடல்:

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள மாமரம் பகுதியில் ஒரு தனியார் தேயிலைத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஜகதீஷ் குரே (35) மற்றும் அவரது மனைவி சீமாதேவி (33) ஆகியோர் தங்கள் குழந்தைகளுடன் கடந்த இரண்டு மாதங்களாகப் பணிபுரிந்து வந்தனர்.

கடந்த சனிக்கிழமை இரவு பணி முடிந்து சீமாதேவி தொழிற்சாலை வளாகத்தில் உள்ள குடியிருப்பிற்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது கணவர் ஜகதீஷ் குரே மற்றும் உடன் இருந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல், முதலில் தாங்களாகவே தேடி வந்தனர். எங்கும் கிடைக்காததால், பின்னர் கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர், தொழிற்சாலை வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள தேயிலைத் தோட்டப் பகுதியில் உடலில் காயங்களுடன் சீமாதேவி சடலமாக மீட்கப்பட்டார். இத்தம்பதிக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

காவல்துறையின் தீவிர விசாரணை:

சம்பவ இடத்தைக் நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர், இறந்த பெண்ணின் உடல் உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டு, தேயிலைத் தொழிற்சாலை நிர்வாகம், பணியாளர்கள், உறவினர்கள், செல்போன் அழைப்புகள் எனப் பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

கொலைக்கான காரணம் அம்பலம்:

தொடர்ந்து காவல்துறையினர், சீமாதேவியின் கணவர் ஜகதீஷ் குரேயைப் பிடித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது தெரியவந்தது. சனிக்கிழமை அன்று, ஜகதீஷ் குரே அதிக அளவில் மது அருந்திவிட்டு குடியிருப்பிற்கு வந்து இரவு நேரத்தில் சீமாதேவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், ஜகதீஷ் குரே தனது மனைவி சீமாதேவியின் கழுத்தை நெரித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து, கோத்தகிரி காவல்துறையினர் ஜகதீஷ் குரே மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk