மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை; மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை!
வேலூர், அக்டோபர் 15: வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள சட்டத்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களின் இல்லத்திற்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட தகவல் இன்று (அக். 15) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்திநகரில் அமைந்துள்ள அமைச்சர் துரைமுருகனின் இல்லத்திற்குக் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் குழுவினர் உடனடியாக அமைச்சர் இல்லத்திற்கு விரைந்தனர்.
மோப்ப நாய் ரீட்டா உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தற்போது தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிரட்டல் தொடர்வது குறித்து கோரிக்கை:
சமீபகாலமாக, முக்கிய அமைச்சர்கள் மற்றும் அரசியல் புள்ளிகளின் வீடுகளுக்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது.
இந்த மிரட்டல்களால் ஏற்படும் தேவையற்ற பதற்றத்தையும், வீண் அலைச்சலையும் தவிர்க்கும் வகையில், மிரட்டல் விடுத்த நபர்கள் யார் என்பதை காவல்துறையினர் விரைவில் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாகக் காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.