கூட்டணிக்கு ஆள் தேடுகிறார்கள் என முதல்வர் சாடல்; கள்ளக்குறிச்சி செல்லாதது ஏன்? என எடப்பாடி பழனிசாமி கேள்வி!
சென்னை, அக்டோபர் 15: தமிழ்நாடு சட்டமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று (அக். 15), கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக ஆளுங்கட்சியான திமுக-வுக்கும், எதிர்க்கட்சியான அதிமுக-வுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
நேரமில்லா நேரத்தில் விதி எண் 56-இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) இதுகுறித்து விவாதிக்கக் கோரினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் விளக்கமும் குற்றச்சாட்டுகளும்:
கரூர் சம்பவம் குறித்து நடந்த நிகழ்வுகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறிய
முக்கியக் கருத்துகள்:
காலதாமதமே காரணம்:
த.வெ.க. தலைவர் மதியம் 12 மணிக்கு வருவார் என அக்கட்சியினர் தெரிவித்த நிலையில், அவர் இரவு 7 மணிக்குத்தான் வந்தார். இந்த 7 மணி நேர காலதாமதம் தான் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்குக் குடிநீர், உணவு, கழிப்பறை வசதிகளைக் கூட த.வெ.க.வினர் செய்து தரவில்லை. காவல்துறையினர் அறிவுறுத்தலை மீறி அவர்கள் செயல்பட்டனர்.
மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் நடத்துபவர்கள் உரிய நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த வேண்டும். கட்டுப்பாடுகளை மீறும்போது பாதிக்கப்படுவோர் அந்தக் கட்சியின் தொண்டர்கள், பொதுமக்கள் தான் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இபிஎஸ் பேசியதற்குப் பதிலளித்த முதல்வர், "ஊரில் கல்யாணம் என்றால் மாரில் சந்தனம் என்பதுபோல எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறார். கூட்டணிக்கு ஆள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் இப்படிப் பேசுகிறார்கள்.
கள்ளக்குறிச்சி vs கரூர்:
இபிஎஸ் கள்ளக்குறிச்சி சம்பவத்தை எழுப்பியபோது, கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது கள்ளச்சாராயம் அருந்தியதால் ஏற்பட்ட உயிரிழப்பு. ஆனால், இங்கு (கரூரில்) நடைபெற்றிருப்பது அப்பாவி மக்கள் மிதிபட்டு ஏற்பட்டிருக்கும் உயிரிழப்பு என்று முதல்வர் பதிலளித்தார்.
எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகள்:
அரசின் அலட்சியம்: த.வெ.க. தலைவர் ஏற்கனவே 4 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பை நடத்தியுள்ளார். அவருக்கு எவ்வளவு கூட்டம் கூடுகிறது என்பது காவல்துறைக்கும், உளவுத்துறைக்கும் நன்றாகத் தெரியும். அதன்படி முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் அசம்பாவிதத்தைத் தவிர்த்திருக்கலாம். முதல்வர் 660 காவலர்கள் பணியில் இருந்ததாகக் கூறினார். ஆனால், காவல் உயர் அதிகாரிகள் 500 பேர் தான் இருந்ததாகக் கூறினார்கள்.
வேலுச்சாமிபுரத்தில் அதிமுக கூட்டம் நடத்த அனுமதி மறுத்த காவல்துறை, த.வெ.க. கூட்டத்திற்கு அனுமதி வழங்கியிருப்பதில் உள்நோக்கம் இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். உயிரிழந்தவர்களுக்கு ஒரே இரவில் உடற்கூராய்வு செய்யப்பட்டது எப்படி? என்று கேள்வி எழுப்பினார்.
ஆம்புலன்ஸ் வாகனத்தில் கூட திமுக மாவட்ட மருத்துவ அணி என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இப்போது சொல்லுங்கள் யார் இந்த விவகாரத்தில் அரசியல் செய்வது?
பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க வேண்டியது முதலமைச்சரின் கடமை. (அவை முன்னவர் துரைமுருகன், முதல்வர் கரூர் சென்றதைச் சுட்டிக்காட்டி பாராட்டச் சொன்னார்.) ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்ட பின்னர், காவல் அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் செய்தியாளர்களைச் சந்திக்கின்றனர். அப்படி இருக்கும்போது விசாரணை எப்படி நியாயமாக நடைபெறும்? அரசின் அலட்சியம் தான் 41 பேர் உயிரிழப்புக்குக் காரணம் என்பதைப் பதிவு செய்கிறேன்.
அமைச்சர்களின் பதில்கள்:
அமைச்சர் மா. சுப்பிரமணியன்:
உடற்கூராய்வுப் பணி அதிகாலை 1.45 மணிக்குத் தொடங்கி அடுத்தநாள் 4 மணிக்குத்தான் நிறைவடைந்தது. மதுரை, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 25 மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு விரைவாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அமைச்சர் எ.வ. வேலு:
சம்பவம் நடைபெற்ற இதே இடத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் கூட்டம் கூடியது. அப்போது எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. உங்களை மாதிரியே அவரும் ஏற்பாடு செய்திருந்தால் இந்த அசம்பாவித சம்பவம் நடைபெற்றிருக்காது.
அமைச்சர் கே.என். நேரு:
கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் சம்பவம் நடைபெற்ற பிறகு ஒருவர் கூட அங்கு வரவில்லை. அதைப்பற்றி எதிர்க்கட்சித் தலைவர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லையே?
அமைச்சர் சிவசங்கர்:
அதிமுகவினர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நினைவுபடுத்தியதையடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு, அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
முதல்வர் கருத்து:
அதிமுகவினர் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் எனத் திட்டமிட்டே வந்துள்ளனர்... மகா கூட்டணி, மெகா கூட்டணி எனச் சொல்கிறார்கள். எப்படி கூட்டணி அமைந்தாலும் அதற்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள், என்று முதல்வர் பேசி விவாதத்தை நிறைவு செய்தார்.