ஆனந்த் ஏற்காட்டில் பதுங்கலா? சி.டி. நிர்மல் குமார் உதவியாளரிடம் விசாரணை; ஆதவ் அர்ஜூனா அலுவலகத்தில் வீடியோ ஆதாரங்களை ஒப்படைக்கக் கோரி காவல்துறை கடிதம்!
சென்னை/கரூர்: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீதான காவல் துறையின் தேடுதல் வேட்டை தீவிரமடைந்துள்ளது. தவெகவின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் இணைப் பொதுச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார் ஆகியோரைக் கைது செய்யப் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பொதுச் செயலாளர் ஆனந்தை தேடும் தனிப்படை:
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனந்தைக் கைது செய்ய, ஏற்கனவே அமைக்கப்பட்ட 5 தனிப்படைகளில் 3 தனிப்படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனந்த், சேலம் மாவட்டம் ஏற்காடு மலை கிராமத்தில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஒரு தனிப்படை குழு அங்கு முகாமிட்டு அவரைத் தேடி வருகிறது. மற்றொரு தனிப்படை குழு சென்னை பகுதியில் முகாமிட்டு ஆனந்தைத் தேடி வருகிறது.
நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜூனா அலுவலகத்தில் விசாரணை:
இணைப் பொதுச் செயலாளர் சி.டி. நிர்மல் குமாரை கைது செய்யப் போலீசார் தீவிரமாக உள்ள நிலையில், சென்னைக்கு வந்த கரூர் போலீசார் நிர்மல் குமாரின் உதவியாளரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். நிர்மல் குமார் ஏன் தலைமறைவாக இருக்கிறார், அவரது செல்போன் ஏன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது போன்ற கேள்விகளைப் போலீசார் எழுப்பி விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் அலுவலகத்திற்கு கரூர் போலீசார் வருகை தந்தனர்.
கரூரில் தேர்தல் பரப்புரையின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள், சிசிடிவி பதிவுகள் ஆகியவற்றை ஒப்படைக்கும்படி அவர்கள் கடிதம் வழங்கியுள்ளனர். தவெக ஐ.டி. விங் நிர்வாகிகள் சென்ற வாகனம், விஜய்யின் பிரசார வாகனத்தில் சிசிடிவி பொருத்தப்பட்டிருப்பதால், அந்த காட்சிகளை ஆய்வுக்காகக் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கரூர் துயரச் சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து கைது நடவடிக்கைகளும் விசாரணை அழுத்தமும் அதிகரித்து வருவது, தவெக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
