சாதி அடையாளங்கள் அற்ற பெயர்களை வைக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு; 'காலனி' பெயரையும் நீக்க நடவடிக்கை!
சென்னை, அக். 8: தமிழகம் முழுவதும் ஊர்கள், தெருக்கள், சாலைகள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி தமிழக அரசு இன்று (அக்டோபர் 8, 2025) அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றங்களை வருகிற நவம்பர் 19, 2025-க்குள் செயல்படுத்த வேண்டும் என்றும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் அறிவிப்பும் நோக்கமும்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் 2025-ல், ஊர் மற்றும் தெருக்களில் இருந்து சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என அறிவித்திருந்தார். மேலும், ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் 'காலனி' என்று அழைக்கப்படுவதைத் தவிர்த்து, அந்தப் பெயரையும் நீக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
தற்போதும் பெரும்பாலான மக்கள் ஒரு ஊர் பெயரைக் கொண்டே ஒருவரின் சாதி அடையாளங்களைத் தெரிந்துகொள்ளும் அவல நிலை நீடிப்பதால், வருங்காலத்தில் சாதிய அடையாளம் அற்ற சமூகம் உருவாகும் முயற்சியாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்:
தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அரசாணையின் படி, சாதிப் பெயர்களை நீக்குவதற்குப் பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இனி தமிழ்நாட்டில் எந்தவொரு ஊரும் சாதிப் பெயரில் இருக்கக்கூடாது.
மாற்றுப் பெயர்கள் (தெருக்கள்/சாலைகள்):
தெருக்கள் மற்றும் சாலைகளுக்கு திருவள்ளுவர், கபிலர், பாரதியார், பாரதிதாசன், தந்தை பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் போன்ற தலைவர்கள் மற்றும் புலவர்களின் பெயர்களை வைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குளம் மற்றும் நீர்நிலைகளுக்கு ரோஜா, மல்லி, முல்லை ஆகிய பூக்களின் பெயர்களை வைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி அலுவலங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
.png)