தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடக்கம்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! Northeast Monsoon to Begin in Tamil Nadu from Tomorrow, October 16

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு; தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் கன மழை எச்சரிக்கை!

சென்னை, அக்டோபர் 15: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில், நாளை முதல் அதாவது அக்டோபர் 16, 2025 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு மழை பதிவாகி வருகிறது.

வடகிழக்குப் பருவமழை தொடக்கம்:

தென்மேற்குப் பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து அடுத்த இரு தினங்களில் விலகக்கூடும்.

அக்டோபர் 16, 2025 அன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள், கேரளா – மாஹே, தெற்கு உள்கர்நாடகம், ராயலசீமா, வடக்குக் கடலோர ஆந்திரப் பிரதேசப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக் கடலில் தாழ்வுப் பகுதி:

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் குமரி கடல் பகுதிகளை நோக்கிநகரக்கூடும்.இதன் காரணமாக, வரும் அக்டோபர் 19, 2025-ஆம் தேதியளவில் தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலட்சத்தீவு பகுதிகளில், கேரள-கர்நாடகப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன மழை எச்சரிக்கை:

அக்டோபர் 15 (இன்று): கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அக்டோபர் 16 (நாளை): வடகிழக்குப் பருவமழை தொடங்க இருக்கும் நிலையில், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்பநிலை குறைவு:

வரும் அக்டோபர் 19, 2025 வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியான கன மழை இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்யும் மழையின் காரணமாக வரும் நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழை வரும் நாட்களில் தீவிரமடையக்கூடும் எனப் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும், இனி தூத்துக்குடி முதல் சென்னை வரை பல்வேறு பகுதிகளில் தினசரி இத்தகைய மழை இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk