வேலூரில் உலகச் சுற்றுலா தின விழா கோலாகலம்: மாணவர்களுக்குப் பரிசளிப்புடன் 'தூய்மைப் பணிகள்' தீவிரம்!
"சுற்றுலா மற்றும் நிலையான மாற்றம்" என்ற கருப்பொருளில் விழிப்புணர்வு; டி.கே.எம். மகளிர் கல்லூரியில் சிறப்பாக நடந்த விழா!
வேலூர், செப்டம்பர் 26: ஐக்கிய நாடுகள் சபையால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27-ஆம் நாள் உலகச் சுற்றுலா தினமாக அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, வேலூரில் உள்ள டி.கே.எம். மகளிர் கல்லூரியில் இன்று (செப். 26) உலகச் சுற்றுலா தின விழா - 2025 சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நிலையான மாற்றம் குறித்து விழிப்புணர்வு:
இந்த ஆண்டு உலகச் சுற்றுலா தினத்தையொட்டி, ஐக்கிய நாடுகள் சபை "சுற்றுலா மற்றும் நிலையான மாற்றம் (Tourism and Sustainable Transformation)" என்ற கருப்பொருளை அறிவித்துள்ளது. இந்தக் கருப்பொருளை மையப்படுத்தி, மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி சுற்றுலாத்துறை சார்பில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வேலூர் தாலுகா, சாய்நாதபுரம், ஆர்.வி.நகர் பகுதியில் உள்ள தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் (டி.கே.எம்.) மகளிர் கல்லூரி (தன்னாட்சி) வளாகத்தில் இவ்விழா நடைபெற்றது.
போட்டிகள் மற்றும் தூய்மைப் பணிகள்:
விழாவில் மாணவர்களுக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், உலகச் சுற்றுலா தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவின் ஒரு பகுதியாக, 'தூய்மை இந்தியா திட்டத்தின்' ஒரு அங்கமான 'தூய்மை சேவை வாரம் - 2025' (Swachhta Pakwada - 2025 Sep 16 to Sep 30) கடைப்பிடிக்கப்படுவதை ஒட்டி, கல்லூரி மாணவர்களைக் கொண்டு வளாகம் முழுவதும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
வரலாற்றுத் துறைத் தலைவர் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து, அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இறுதியில், சுற்றுலா அலுவலர் (முகூபொ) சுற்றுலா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நன்றியுரையாற்றி விழா நிறைவுபெற்றது.