கேங் லீடர் போட்டியில் ஏற்பட்ட மோதலில் தாக்குதல் நடத்தியதாகக் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம்; காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த கும்பல் சிக்கியது!
சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவரைப் பட்டாக் கத்தியால் வெட்டிக் காயப்படுத்திய வழக்கில், அதே கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவர்களைப் பல்லாவரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்குக் கல்லூரியில் நிலவிய கேங் லீடர் போட்டி தான் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
திருநீர்மலை பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் (வயது 22), பல்லாவரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் விஸ்காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம் போல முன்தினம் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்றபோது, பின்னால் நான்கு இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து வந்த 8 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்துள்ளது.
அந்தக் கும்பல் பட்டாக் கத்தியால் ஹரிஷைத் தலை, கை, கால் என உடலில் பல்வேறு இடங்களில் வெட்டிவிட்டுத் தப்பியோடியது. இரத்த வெள்ளத்தில் சாய்ந்த மாணவன் ஹரிஷைச் சக மாணவர்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்தச் சம்பவம் குறித்துப் பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், இந்தக் கொடூரச் சம்பவம் கல்லூரியில் நிலவிய 'கேங் லீடர்' போட்டி காரணமாக நடந்தது தெரியவந்தது. தாக்குதலில் ஈடுபட்ட நபர்களைத் தேடி வந்த நிலையில், பல்லாவரம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் மறைந்திருந்த மாணவர்களான நிஷாந்த், பிரவீன், அன்பரசு ஆகியோரை போலீசார் கைது செய்து, வழக்குப் பதிவு செய்த பின்னர் சிறைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மீதமுள்ள நபர்களையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.