கோவையில் தனியார் காப்பகத்தில் கொடூரம்; குழந்தைகள் நல ஆர்வலர்கள் வேதனை - கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கோயம்புத்தூர், செப்டம்பர் 25: கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கோட்டப்பாளையம் கிராமத்தில் இயங்கிவரும் ஒரு தனியார் சிறுவர் காப்பகத்தில், காப்பாளர் ஒருவர் குழந்தைகளைப் பெல்டால் கடுமையாகத் தாக்கும் வீடியோ வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரேஸ் ஹாப்பி ஹோம் டிரஸ்ட் என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்தக் காப்பகத்தில், 6 முதல் 18 வயதுக்குட்பட்ட ஒன்பது சிறுவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். பள்ளிகளில் குழந்தைகளைத் தாக்குவதற்கு நீதிமன்றத் தடையுள்ள நிலையில், காப்பகத்தில் காப்பாளர் ஒருவர் சிறுவர்களைப் பெல்டால் தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவிப் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டிய காப்பகத்திலேயே இத்தகைய கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது, சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இந்தச் செயலுக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து, காப்பகத்தின் பொறுப்பாளர் செல்வராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.