லிங்க பைரவி அபிஷேகம், பிரமாண்டமான இசை நிகழ்ச்சிகள்; சத்குரு ஞானோதயம் அடைந்த நாளில் சிறப்பு சத்சங்கத்துடன் விழா சிறப்புற்றது!
கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் நவராத்திரி விழா செப்டம்பர் 22-ஆம் தேதி தொடங்கி, கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வரும் 30-ஆம் தேதி வரையிலான ஒன்பது நாட்களுக்கும் லிங்க பைரவி வளாகத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அத்துடன், சூர்ய குண்ட மண்டபத்தில் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகளும், கைவினைப் பொருட்கள் கண்காட்சியும்* விமரிசையாக நடைபெற்று வருகின்றன.
நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வுகள்:
ஈஷாவில் நவராத்திரி விழா திங்கள்கிழமை (செப்.22) ப்ராஜக்ட் சம்ஸ்கிருதி கலைஞர்களின் நடன நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
சத்குருவுடன் சிறப்பு சத்சங்கம்: செவ்வாய்க்கிழமை (செப்.23) சத்குரு ஞானோதயம் அடைந்த திருநாளையொட்டி, ஆதியோகி ஆலயத்தில் சத்குருவுடன் சிறப்பு சத்சங்கம் மற்றும் சவுண்டஸ் ஆப் ஈஷாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
இன்றைய நிகழ்ச்சி: வெள்ளிக்கிழமை இன்று (செப்.26) அம்பி சுப்பிரமணியத்தின் கர்நாடக வயலின் கச்சேரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
வருகின்ற நிகழ்ச்சிகள்: சனிக்கிழமை (செப்.27) ப்ராஜக்ட் சம்ஸ்கிருதியின் இசை நிகழ்ச்சியும், ஞாயிற்றுக்கிழமை (செப்.28) புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியக் கலை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. திங்கட்கிழமை (செப்.29) மெகபூப் அவர்களின் பாரம்பரிய இசை நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை (செப்.30) மார்கம் என்ற தலைப்பில் ப்ராஜக்ட் சம்ஸ்கிருதியின் நடன நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.
கொலு மற்றும் கண்காட்சி:
ஈஷா யோக மையத்தில் நவராத்திரியை முன்னிட்டுச் சூர்ய குண்ட வளாகத்தில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில்தான் அனைத்து இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூர்ய குண்ட மண்டபத்துக்கு எதிரே ஹேண்ட்ஸ் ஆப் கிரேஸ் என்ற தலைப்பில் கைவினைப் பொருள்களின் விற்பனை மற்றும் கண்காட்சியும் நடைபெறுகிறது. இதில், கைத்தறி நெசவு துணிவகைகளும், கைவினைப் பொருள்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.