அடுத்த கட்சியின் கொள்கைகளைத் தனது கொள்கையாக ஏற்றுக்கொள்கிறார் - பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவில் விமர்சனம்!
நடிகர் விஜயின் அரசியல் நிலைப்பாடு குறித்து பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தனது கட்சிக்கு எனக் கொள்கை எதுவும் இல்லாமல், அடுத்த கட்சி தலைவர்களின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, விஜய் ஒரு கோமாளியாக இருக்கிறாரென அவர் சாடியுள்ளார்.
வேலூரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய வேலூர் இப்ராஹிம், தி.மு.க. தலைமையிலான தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், திராவிட மாடல் மக்களை ஏமாற்றும் மாடலாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
விஜய்க்கு இப்ராஹிம் வைத்த சவால்கள்:
* கோமாளி: நடிகர் விஜய் பாசிச பா.ஜ.க. என்று எங்கள் கட்சியை விமர்சிக்கிறார். அவருக்கு என்ன கொள்கை இருக்கிறது? அடுத்த கட்சியின் தலைவர்களின் கொள்கைகளைத் தனது கொள்கையாக ஏற்றுக் கொள்கிறார். கோமாளியாக இருக்கிறார்.
* விவாதத்திற்கு தயாரா?: விஜய் சிறந்த தலைவர் என நிரூபிக்க வேண்டுமென்றால், பா.ஜ.க.வுடன் கொள்கை ரீதியாக விவாதம் செய்யத் தயாரா? பொதுத் தளத்தில் அவரைச் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
* தி.மு.கவின் 'பி' டீம்: விஜய், தி.மு.க.வின் 'பி' டீம் என மற்றவர்கள் சொல்கிறார்கள். நான் அதைச் சொல்லமாட்டேன். ஆனால், ஒரு கட்சி செய்வதை இன்னொரு கட்சி 'காப்பி' அடித்தால் அதற்குப் பெயர்தான் 'பி' டீம். விஜய் காப்பி அடிக்கிறாரா இல்லையா?
* எதிர்காலம் 'பூஜ்யம்': தேசத்திற்கு எதிராக இளைஞர்களைத் தூண்டி, பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் விஜய் பேசினால், அவரது எதிர்காலம் பூஜ்ஜியமாக மாறிவிடும். கடந்த காலங்களில் கமல்ஹாசனுக்கு ஏற்பட்ட நிலை, விஜய்க்கும் ஏற்படும்.