நிலத்தகராறில் அமைதிப் பேச்சுவார்த்தை மீறல்; வைரலாகும் வீடியோவால் சமூகத்தில் கொந்தளிப்பு!

தஞ்சாவூர், செப்டம்பர் 25: தஞ்சாவூர் மாவட்டம், கொல்லாங்கரை கிராமத்தில் பொதுமக்களின் பாதைக்கு வேலி போட்டு மறித்து, அவ்வழியாகச் செல்லும் பள்ளி மாணவ மாணவிகளை கட்டைகளைக் கொண்டு விரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகளாகப் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த இந்தப் பாதையை, தனிநபர் ஒருவர் தனக்குச் சொந்தமானது எனக் கூறி வேலி போட்டு அடைத்ததால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் எனப் பலரும் பாதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை பாதையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என அந்தப் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், அமைதிப் பேச்சுவார்த்தை முடிந்த பிறகும், சம்பந்தப்பட்ட நபர் பாதையை மறித்து, மாணவ மாணவிகளை கட்டைகளைக் கொண்டு விரட்டுவது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலத்திற்கு உரிய பட்டா உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டுமென இருதரப்பு மக்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
in
தமிழகம்