பூ மார்க்கெட்டில் நடக்கும் சிண்டிகேட்; பெயர் பலகை வைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் விவசாயிகள் சாலை மறியல்!
புதுக்கோட்டை, செப்டம்பர் 25: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் பூ ஏஜென்ட்களின் செயல்பாடுகளைக் கண்டித்து, விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏஜென்ட்களின் சிண்டிகேட் அமைப்பால் பூக்களுக்கு குறைந்த விலை கிடைப்பதாகக் குற்றம்சாட்டி விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி பூ மார்க்கெட்டில், விவசாயிகள் தாங்கள் விளைவித்த பூக்களை தினந்தோறும் கொண்டுவந்து ஏலத்தில் விற்பனை செய்வது வழக்கம். ஆனால், இங்குள்ள சில ஏஜென்ட்கள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு, பூக்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல் குறைந்த விலைக்கு ஏலம் எடுப்பதாக விவசாயிகள் பல நாட்களாக அதிருப்தியில் இருந்தனர்.
இந்த நிலையில், தங்களைப் பாதுகாக்க, விவசாயிகள் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட பூக்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் நல சங்கம் என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டது. அதற்கான பெயர் பலகையை மார்க்கெட் வளாகத்தில் வைப்பதற்கு ஏஜென்ட்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், புதுக்கோட்டை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எம்.ஜி.ஆர். சிலை அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைச் சமாதானப்படுத்தினர். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் அவர்களிடம் பேசியபோது, "வியாபாரிகள் ஒன்றுசேர்ந்து சிண்டிகேட் அமைப்பதுபோல், விவசாயிகளும் ஒன்றுசேர்ந்து தங்களைப் பாதுகாக்க சங்கம் அமைப்பது நியாயமானது. பூ ஏஜென்ட்களின் இதுபோன்ற அடக்குமுறைகள் கண்டிக்கத்தக்கவை" எனக் கூறினார். இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டிய நிலையில், மார்க்கெட் வளாகத்திற்குள் வைத்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
in
தமிழகம்