பாதாள சாக்கடை பணியாளரின் அராஜகம்: கலெக்டரிடம் சென்றாலும் கவலையில்லை என மிரட்டல்! Underground Drainage Worker's Arrogance in Nellai

பாதாள சாக்கடை பணியாளரின் அராஜகம்: கலெக்டரிடம் சென்றாலும் கவலையில்லை என மிரட்டல்! Underground Drainage Worker's Arrogance in Nellai

பணிகளின் மந்தநிலை ஒருபுறம்... பணியாளர்களின் அடாவடி மறுபுறம்... நெல்லையில் கொந்தளிக்கும் மக்கள்!

நெல்லை மாநகராட்சியில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளின் மந்த நிலையால் ஏற்கனவே அவதிப்பட்டு வரும் மக்களுக்கு, தற்போது பணியாளர்களின் அராஜகமும் சேர்ந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ கிரவுண்ட் அடுத்துள்ள சீனிவாசன் நகரில், பணியாளர் ஒருவர் பொதுமக்களிடம் கலெக்டரிடம் சென்றாலும் கவலையில்லை என அடாவடியாகப் பேசிய சம்பவம், பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.

ஐ கிரவுண்ட் அருகே சீனிவாசன் நகரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது, பணியாளர் ஒருவர், கான்கிரீட் கலவையை ஏற்றிச் செல்லும் வாகனத்தை அஜாக்கிரதையாக இயக்கியுள்ளார். சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை இடித்துத் தள்ளும் விதமாக அவர் வாகனம் ஓட்டிச் சென்றதைக் கண்ட பொதுமக்கள், அவரிடம் முறையிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த வடமாநிலத் தொழிலாளி, "இங்கு வேலை நடக்கிறது. நீங்கள் தான் உங்கள் வாகனங்களை ஓரமாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் இடித்துக்கொண்டுதான் செல்வேன். நீங்கள் கலெக்டரிடம் சென்றாலும் எனக்குக் கவலையில்லை. பத்திரிகையாளர்களிடம் சொன்னாலும் அவர்களுக்கு என்ன இரண்டு கொம்பா முளைத்திருக்கிறது?" என்று கூறி, பொதுமக்களை மிரட்டியுள்ளார்.

முன்னணி நிறுவனங்களின் அலட்சியமும், நிர்வாகத்தின் மெத்தனமும்:

நெல்லை மாநகரப் பகுதிகளில் இந்தப் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் பல மாதங்களாக ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பணிகளின் மந்த கதியால் போக்குவரத்து இடையூறுகள், சுகாதாரச் சீர்கேடுகள், விபத்துகள் எனப் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். அண்மையில் தச்சநல்லூரில் பாதாள சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் இருவர் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்தச் சம்பவத்தின் அதிர்ச்சி நீங்குவதற்குள், தற்போது ஒரு பணியாளரே பொதுமக்களிடம் அதிகாரத் தோரணையில் மிரட்டல் விடுத்திருப்பது, திட்டத்தை மேற்கொண்டு வரும் நிறுவனத்தின் மீதும், மாநகராட்சி நிர்வாகத்தின் மீதும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. பணியாளர்களின் அத்துமீறல்களுக்குப் பின்னணியில், நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு உள்ளதாகப் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks