தனது போன் காணாமல் போனதால் திருடிய நபர்; லாவகமாக திருடிய வினோத்திடமிருந்து 10 செல்போன்கள் பறிமுதல்!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்த பயணிகளை குறிவைத்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட இருவரை ரயில்வே போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
போன் காணாமல் போனதால் திருடிய நபர் கைது:
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மோகன் என்பவர், லக்னோவிற்குச் செல்வதற்காகச் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முதல் நடைமேடை அருகே அமர்ந்து உறங்கியுள்ளார். பின்னர் விழித்துப் பார்த்தபோது, பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் காணாமல் போனதைக் கண்டு ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கிருஷ்ணன் மோகன் அருகே அமர்ந்திருந்த ஒருவர், அவரது பாக்கெட்டில் இருந்து செல்போனைத் திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த லக்ஷ்மண குமார் என்பது தெரியவந்தது. கொல்கத்தா செல்ல இருந்த சமயத்தில் தனது செல்போன் காணாமல் போனதால், உடனடியாக தனக்கு செல்போன் தேவைப்பட்டதால் தூங்கியவரிடம் இருந்து திருடிச் சென்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் இருந்து திருடப்பட்ட செல்போனை மீட்ட போலீசார், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மற்றொரு திருடன் கைது:
இதேபோல, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டர் அருகே உறங்கும் பயணிகளை மட்டுமே குறிவைத்துத் தொடர்ச்சியாக செல்போனை லாவகமாகத் திருடி வந்த மேடவாக்கத்தைச் சேர்ந்த வினோத் (36) என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இவரிடமிருந்து திருடப்பட்ட 10 செல்போன்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.