பூட்டானிலிருந்து முறைகேடாக இறக்குமதி; கருப்பு பணப் பரிமாற்றம் குறித்து தீவிர ஆய்வு - 150க்கும் மேற்பட்ட கார்கள் சிக்கின!
பூட்டான் நாட்டிலிருந்து முறைகேடாக இறக்குமதி செய்யப்பட்டு கேரளாவில் புழக்கத்தில் இருந்த கார்களுக்குப் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருப்பது சுங்கத்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது. பிரபல நடிகர் அமித் சக்காளக்கல் பயன்படுத்திய காருக்குப் போலி முகவரியில் ஆவணம் தயாரிக்கப்பட்டது கண்டறியப்பட்டதை அடுத்து, கருப்பு பணப் பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை ECIR (அமலாக்க வழக்கு தகவல் அறிக்கை) பதிவு செய்ய முடிவெடுத்துள்ளது.
பூட்டானில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் அதிகளவில் கேரளாவில் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கண்டறிந்த சுங்கத்துறையினர், பிரபல நடிகர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றின் ஆவணங்கள் தீவிர ஆய்வு செய்யப்பட்டன.
அந்த வகையில், கேரள நடிகர் அமித் சக்காளக்கல் பயன்படுத்தி வந்த கார் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டபோது, அதன் உரிமையாளர் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மாவின் அன்சாரி என்பவர் பெயரில் இருப்பது தெரியவந்தது. அவரது முகவரியை ஆய்வு செய்தபோது, அப்படி ஒரு நபரோ, முகவரியோ இல்லை என்பதும் கண்டறியப்பட்டது. இதனால், அந்த வாகனத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
முறைகேடாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 150க்கும் மேற்பட்டவை குறித்த தகவல் சுங்கத்துறைக்குக் கிடைத்தபோதிலும், இதுவரை 38 வாகனங்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்களில் கருப்பு பணப் பரிமாற்றம் நடந்திருப்பது உறுதியானதால், அமலாக்கத்துறை தற்போது தலையிட்டு ECIR பதிவு செய்து வழக்கை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது.