காதுகேளாதோர் தின விழிப்புணர்வுப் பேரணி; ‘சைகை மொழியை முறையாகக் கற்றுக்கொள்கிறேன்’ என ஆட்சியர் உறுதி - பொதுமக்கள் பாராட்டு!
தஞ்சாவூர், செப்டம்பர் 25: காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாத மாணவர்களுடன் சைகை மொழியில் பேசி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். சைகை மொழியை முறையாகக் கற்றுக்கொண்டு அவர்களுடன் மீண்டும் பேசுவதாக அவர் உறுதியளித்த செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காது கேளாதோர் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தஞ்சாவூரில் விழிப்புணர்வுப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதிய பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய இந்தப் பேரணியை, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். அப்போது அங்கு கூடியிருந்த காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாத மாணவர்களிடம் அவர் சைகை மொழியில் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
மேலும், "சைகை மொழியை நான் முறையாகக் கற்றுக்கொண்டு உங்களுடன் பேசுவேன்" என சைகை மொழியிலேயே அவர் கூறியது மாணவர்களையும் உடன் இருந்தவர்களையும் நெகிழச் செய்தது. இந்த விழிப்புணர்வுப் பேரணி புதிய பேருந்து நிலையத்திலிருந்து துவங்கி, சரபோஜி கல்லூரி வழியாக ராஜராஜன் மணிமண்டபத்தை அடைந்தது.
in
தமிழகம்