நிலத்தகராறில் அரங்கேறிய நாடகம்; கடத்தல்காரர்கள் ஐந்து பேர் அதிரடியாகக் கைது! - குடியாத்தம் போலீசார் தீவிர விசாரணை.

வேலூர், செப்டம்பர் 26: நிலம் தொடர்பான பணப் பிரச்சினை காரணமாக, போலீஸ் எனக் கூறி விவசாயி ஒருவரைக் கடத்திய ஐந்து பேரை வேலூர் மாவட்டம் குடியாத்தம் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியாத்தம் அடுத்த ஓலக்காசி பகுதியைச் சேர்ந்த விவசாயி தனசேகர் (எ) சேகர் என்பவருக்கும், லத்தேரி பகுதியைச் சேர்ந்த சுஷ்மா என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பாகப் பணப் பிரச்சினை இருந்துள்ளது. இது குறித்து இரு தரப்பினரும் லத்தேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், இன்று காலை சேகர் வீட்டுக்கு வந்த ஐந்து பேர் கொண்ட மர்மக் கும்பல், தாங்கள் லத்தேரி போலீசார் எனக் கூறி அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சேகரின் மனைவி பவித்ரா, உடனடியாகக் குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், விரைந்து செயல்பட்ட போலீசார், கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேரையும் லத்தேரி அருகே மடக்கிப் பிடித்து, விவசாயி சேகரை மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட பாபு, விநாயகம், தமிழ்ச்செல்வன், ரவி மற்றும் சுஷ்மாவின் கணவர் தேவேந்திரன் ஆகிய ஐந்து பேரையும் குடியாத்தம் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.