நகரப் பகுதியில் சுகாதாரக்கேடு: மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்திய மர்ம நபர்கள் யார்? - உரிய விசாரணைக்கு பொதுமக்கள் கோரிக்கை!
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரின் மையப்பகுதியான பங்களா மேடு பகுதியில் குவியல் குவியலாகக் கொட்டப்பட்டு எரிக்கப்பட்ட மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த அத்துமீறிய செயல், அப்பகுதி மக்களையும் வாகன ஓட்டிகளையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேட்டுப்பாளையம் பங்களா மேடு சாலையோரம், காலாவதியான மருந்து மாத்திரைகள், டானிக்குகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டித் தீ வைத்துள்ளனர். இதில் பல மருந்துகள் பாதி எரிந்தும், எரியாமலும் அப்படியே கிடந்துள்ளன. இந்தச் செயல், நகரின் சுகாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் காலாவதியான மருத்துவக் கழிவுகளை உரிய முறையில் அப்புறப்படுத்தாமல், பொது இடத்தில் கொட்டி எரிக்க முயன்ற இந்தச் செயல் குறித்து உடனடியாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சுகாதாரக்கேட்டிற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
in
தமிழகம்