4 மாதங்களுக்குப் பிறகு தடுப்பணை நிரம்பியதால் விவசாயிகள் உற்சாகம்!
ஓமலூர், காடையாம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்துவரும் தொடர்மழையால், ஏற்காடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் கிழக்கு மற்றும் மேற்கு சரபங்கா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக, ஏற்காடு மலையில் இருந்து வரும் கிழக்கு மற்றும் மேற்கு சரபங்கா ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஓமலூர் அருகே உள்ள சர்க்கரை செட்டிபட்டி கிராமத்தில் உள்ள கிழக்கு சரபங்கா ஆற்றின் தடுப்பணை நிரம்பி வழிகிறது. இதனை அப்பகுதி மக்களும் விவசாயிகளும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
இதேபோல், மேற்கு சரபங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், டேனிஷ்பேட்டை ஏரி நிரம்பி வருகிறது. நான்கு மாதங்களுக்குப் பிறகு தடுப்பணை நிரம்பியதால், விவசாயப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு, விவசாயிகள் உற்சாகத்துடன் உள்ளனர்.