வாயில் பேப்பரை திணித்து பச்சிளம் குழந்தையை கொன்ற தாய் கைது!
'குழந்தை வந்ததால் கணவன் அன்பு குறைந்தது' - தாய் பரபரப்பு வாக்குமூலம்!
கன்னியாகுமரி: கணவர் தன்னிடம் அன்பு செலுத்துவது குறைந்ததற்கு குழந்தைதான் காரணம் எனக் கருதி, வாயில் பேப்பரை திணித்து 40 நாள் பச்சிளம் குழந்தையை கொன்ற தாய், போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே உள்ள பாலூர் காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் பெனிட்டா ஜெய அன்னாளுக்கு (20), கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. கணவர் கார்த்திக் (21) வேலைக்குச் சென்று திரும்பியபோது, குழந்தை அசைவற்ற நிலையில் இருந்துள்ளது. அப்போது, பாலூட்டும் போது குழந்தை தவறி கீழே விழுந்துவிட்டதாக மனைவி தெரிவித்துள்ளார்.
உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அது ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திக், கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், குழந்தை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் குழந்தையின் தாய் பெனிட்டா ஜெய அன்னாளைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், "எனக்குக் குழந்தை பிறந்த பிறகு, என் கணவர் என் மீது செலுத்தும் அன்பு குறைந்தது. இதனால், குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதற்கு காரணம் குழந்தைதான் என்ற ஆத்திரத்தில், குழந்தையின் வாயில் பேப்பரைத் திணித்துக் கொன்றேன்" என அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.