அதிவேகமாக வந்த ட்ரைலர் லாரி மோதித் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு - சென்னையில் பெரும் சோகம்!
பணி முடிந்து திரும்பும் வழியில் நேர்ந்த விபரீதம்; லாரி ஓட்டுநர் கைது, விசாரணை தீவிரம்.
சென்னை மாதவரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் ரவிக்குமார் (49), நேற்று பணிக்குச் சென்று கொண்டிருந்தபோது நடந்த கோர விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாதவரம் கதிர்வேடு பகுதியில் பணி முடிந்து, மாதவரம் ரவுண்டானா பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து சென்றுள்ளார் ரவிக்குமார். மாதவரம் ரெட்டேரி பாலம் அருகே சென்றபோது, அதே திசையில் வந்த ட்ரைலர் லாரி மோதி அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். துரதிர்ஷ்டவசமாக, லாரியின் பின்பக்க டயர் அவர் மீது ஏறி இறங்கியதில் பலத்த காயமடைந்தார்.
உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிக்குமார், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிர் பிரிந்தது. இந்தச் சம்பவம் காவல் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த கொளத்தூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்தை ஏற்படுத்திய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ரமேஷ் (52) என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.