புத்தகப் பையில் புகையிலை விவகாரம்; சாதி மோதல் எனப் பரவும் வதந்தி - பொறுப்புடன் செய்தி வெளியிட காவல்துறை கோரிக்கை!
நெல்லை, செப்டம்பர் 25: நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள டோனாவூரில், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஒன்றில் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை பள்ளி வளாகத்தில், ஒரு மாணவனின் புத்தகப் பையில் புகையிலை இருந்ததை மற்றொரு மாணவன் சக மாணவர்களிடம் தெரிவித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த சம்பந்தப்பட்ட மாணவன், ஆயுதத்தைக் கொண்டு வந்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், இரண்டு மாணவர்கள் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, இந்தச் சம்பவம் ஜாதி ரீதியான மோதல் எனச் சமூக வலைத்தளங்களிலும், சில தொலைக்காட்சிச் செய்திகளிலும் பரவி வருகிறது. இந்நிலையில், நெல்லை மாவட்ட காவல்துறை இது குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜாதி மோதல் எனச் செய்திகள் வெளியிடுவது மக்களிடையே தேவையற்ற பீதியை ஏற்படுத்துகிறது. நடந்ததை மிகைப்படுத்தாமல் சமூகப் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும்" என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. அதேசமயம், மாணவர்கள் ஆயுதங்களை பயன்படுத்தியதை காவல்துறை மறுக்கவில்லை.