ஆதரவற்ற குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் நபர்; நன்கொடை வசூலில் முறைகேடு புகார் - வீடியோவால் பரபரப்பு!
கோயம்புத்தூர், செப். 25: தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில், குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில் இயங்கி வரும் ஒரு தனியார் அமைப்பில், அங்குள்ள சிறுவன் ஒருவனை அங்கிருந்த நபர் ஒருவர் பெல்டால் கொடூரமாகத் தாக்கும் செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழில் நகரமான கோவையில், தாய், தந்தையை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு, உடை அளிப்பதாகக் கூறி, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் நன்கொடைகள் என்ற பெயரில் வசூலில் ஈடுபடும் பல அமைப்புகள் உள்ளன. அந்த வகையில், கோவை மாவட்டம், சர்க்கார் சாமகுளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டை பாளையம் பகுதியில் கிரேசி ஹேப்பி ஹோம் டிரஸ்ட் என்ற பெயரில் தனியார் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 26 ஆதரவற்ற குழந்தைகள் பராமரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்தக் காப்பகத்தில் உள்ள ஒரு சிறுவனை அங்குள்ள நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த நபர் சிறுவனைப் பிடித்து வைத்துக்கொண்டு, பெல்டால் சரமாரியாக அடித்துத் துன்புறுத்துவது அந்தக் காட்சிகளில் தெளிவாகப் பதிவாகி உள்ளது. குழந்தைகள் காப்பகத்தில் நிகழும் இந்தக் கொடூரத் தாக்குதல் சம்பவம் மக்கள் மத்தியில் ஆத்திரத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோசடிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் உடனடியாகத் தலையிட்டு, உரிய விசாரணை நடத்தி, தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அங்கு தவிக்கும் ஆதரவற்ற குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.