சைபர் கிரிமினல்களின் சினிமா பாணி மோசடி; கிட்னி விற்பனை என நம்பி ஏமாந்த மாணவி - போலீசார் தேடுதல் வேட்டை!
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது யாமினி, ஹைதராபாத்தில் நர்சிங் படித்து வருகிறார். தனது தந்தை அளித்த ஏ.டி.எம். கார்டைப் பயன்படுத்தி சுமார் ₹2 லட்சம் செலவழித்த அவர், கடன் தொகையைத் தந்தை கண்டுபிடிப்பதற்குள் திருப்பிச் செலுத்த அவசரமாகப் பணம் தேடினார். அப்போது சமூக வலைதளத்தில், கிட்னி தேவை - நன்கொடையாளருக்கு 7 கோடி ரூபாய் என்ற விளம்பரம் அவரது கண்ணைக் கவர்ந்தது.
விளம்பரத்தில் உள்ள எண்ணைத் தொடர்பு கொண்டபோது, டாக்டர் பிரவீன் ராஜ் என்று கூறிய ஒரு நபர், முன்பணமாக ₹3.5 கோடி வழங்குவதாக உறுதியளித்தார். முதலில் மருத்துவ அறிக்கையைச் சரிபார்த்த அவர், பின்னர், போலீஸ் சரிபார்ப்பு மற்றும் வரி கட்டணமாக ₹16 லட்சம் செலுத்துங்கள் என்று கூறியுள்ளார்.
இது ஒரு மிகப்பெரிய மோசடியெனத் தெரியாமல், யாமினி தனது தந்தை கணக்கிலிருந்து அந்தத் தொகையை உடனே அனுப்பினார். ஆனால், பணத்தைத் திரும்பக் கேட்டபோது, போலி முகவரி அளித்து ஏமாற்றியுள்ளனர். இதனையடுத்து யாமினியின் தந்தை, மகளை வீட்டுக்கு வரச் சொன்னபோது, பயந்து ஹைதராபாத்திலிருந்து தப்பி ஓடிய யாமினி நண்பர் வீட்டில் மறைந்திருந்தார்.
நிபுணர்கள் தரும் எச்சரிக்கை!
இந்த மோசடி, சமூக வலைதளங்களில் பரவும் போலி விளம்பரங்களின் ஆபத்தை எச்சரிக்கையாக உணர்த்துகிறது. எளிதாகப் பணம் சம்பாதிக்கலாமெனக் கூறும் எந்த விளம்பரத்தையும் நம்ப வேண்டாமென நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். பணம் என்பது கடின உழைப்பின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்றும், இத்தகைய மோசடிகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள போலீஸ் அல்லது சைபர் கிரைம் அமைப்புகளை உடனடியாக அணுகுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.