6.41 கிலோ கொக்கைன் கடத்தல்: வெளிநாட்டிலிருந்து வந்த வடமாநில இளைஞர்கள் உட்பட மூன்று பேர் சிக்கினர்; ஒரு நைஜீரியர் தப்பியோட்டம்!
நடந்தது என்ன?
எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து நேற்று அதிகாலை வந்த விமானத்தில், சுற்றுலா விசாவில் வந்த வடமாநிலப் பயணிகளின் நடவடிக்கைகளில் சுங்கத்துறை அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், அவர்களது உடமைகளைச் சோதனையிட்டனர்.
சோதனையில், சாக்லேட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் பாக்கெட்டுகளில், கொக்கைன் பவுடர் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மொத்த எடை 6.41 கிலோ. இதன் சர்வதேச மதிப்பு ரூ.65 கோடி.
தப்பியோடிய நைஜீரியர்:
விசாரணையில், இந்தப் போதைப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக மும்பையைச் சேர்ந்த ஒருவர் காத்திருந்தது தெரியவந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்த நிலையில், இந்தப் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒரு நைஜீரியர் உள்நாட்டு விமானம்மூலம் டெல்லிக்குத் தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. தப்பியோடிய நைஜீரியரை கைது செய்ய அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல், கூலிக்காகப் பயணிகளைப் பயன்படுத்தி இது போன்ற கடத்தல்களில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரே நேரத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.