விஜய்-யின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயண விவரம் விரைவில் வெளியீடு!
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மக்கள் சந்திப்பு சுற்றுப்பயண விவரங்களை விரைவில் வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் கட்சியின் இரண்டு மாநில மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள விஜய், அடுத்தகட்டமாகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
செப்டம்பர் 17-ல் தொடக்கம்:
கட்சியின் முக்கிய கொள்கைத் தலைவரான பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி, ஈரோட்டில் இருந்து தனது மக்கள் சந்திப்புப் பயணத்தைத் தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து, மாவட்டச் செயலாளர்களுடன் தொலைபேசி வாயிலாக அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதுதொடர்பாக, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், விஜய்யின் சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகள் மற்றும் அனுமதி பெறுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில், விஜய்-யின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயண விவரங்கள் அடங்கிய முழுமையான பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.