மூப்பனார் பிரதமராவதை தடுத்தது யார் என்று தெரியும் - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு!
தமிழர் பிரதமராக இருந்த வாய்ப்பை ஒரு சக்தி தடுத்தது என்று மறைமுகமாக திமுகவை மத்திய அமைச்சர் நிர்மலா சீத்விமர்சித்த !
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் 24-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
"மூப்பனார் பிரதமராவதை தடுத்தது யார்?"
"எளிமையும், நேர்மையும், தேசியமும் ஒருங்கே கொண்ட தலைவராக மூப்பனார் திகழ்ந்தார். அவர் இந்தியாவிற்கே பிரதமராக வேண்டிய ஒரு தருணம் வந்தது. ஆனால், அவருக்கு ஆதரவு தராமல் அந்த வாய்ப்பைத் தடுத்த சக்தி யார் என்பது நமக்குத் தெரியும்" என்று நிர்மலா சீதாராமன் மறைமுகமாக திமுகவை விமர்சித்தார்.
"தமிழ் மற்றும் தமிழ் கலாச்சாரம் என்று பேசுபவர்கள், ஒரு தமிழர் பிரதமராகும் வாய்ப்பு வந்தபோது அதனைத் தடுத்தனர். தமிழகத்திற்கு நடந்த மிகப்பெரிய துரோகம் இது. இதை ஒருபோதும் நம்மால் மறக்க முடியாது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
2026 தேர்தல் குறித்து:
"மூப்பனாரின் கொள்கைகளுக்கு ஏற்ற நல்லாட்சி தமிழகத்தில் அமைய நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அதை நிறைவேற்ற நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தமிழக மக்கள் நல்லாட்சி கேட்கிறார்கள்; அதை அவர்களுக்கு வழங்குவது நமது பொறுப்பு" என்று நிதியமைச்சர் கூறினார்.
மேலும், போதைப்பொருள் மற்றும் சாராயப் பிரச்சனைக்கு எதிராக அனைவரும் ஒன்று திரண்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.