ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஸ்பான்சர் இல்லாமல் இந்திய அணி விளையாட வாய்ப்பு!
வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி ஜெர்சி ஸ்பான்சர் இல்லாமல் களமிறங்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அமலுக்கு வந்த ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தால், இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சராக இருந்த ட்ரீம் 11 நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதே இதற்கு முக்கிய காரணம்.
ட்ரீம் 11 ஒப்பந்தம் ரத்து ஏன்?
கடந்த 2023 ஜூலை மாதம், ட்ரீம் 11 நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக, ஒரு போட்டிக்கு ரூ.1.20 கோடி என்ற கணக்கில் சுமார் ரூ.358 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது.
ஆனால், மத்திய அரசு ஆன்லைன் சூதாட்டச் செயலிகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கக் கடுமையான சட்டங்களை அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, பல மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் ட்ரீம் 11 நிறுவனம் செயல்பட்டு வந்தாலும், அது ஆன்லைன் சூதாட்டத்தின் ஒரு வடிவமாகவே பார்க்கப்படுகிறது. இந்தச் சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க, அந்நிறுவனம் இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்சர் பொறுப்பிலிருந்து விலகியதாகத் தெரிகிறது.
பிசிசிஐயின் நிலைப்பாடு:
புதிய டைட்டில் ஸ்பான்சரைத் தேடும் பணியில் பிசிசிஐ தீவிரமாக இறங்கியுள்ளது. குறிப்பாக, 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை புதிய ஸ்பான்சருக்கான ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது.
பிசிசிஐயின் இடைக்காலத் தலைவர் ராஜீவ் சுக்லா தலைமையில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடைபெற்ற அவசரக் கூட்டத்தில், புதிய ஸ்பான்சரைக் கண்டறிவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், ஆசிய கோப்பை தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், புதிய ஒப்பந்தம் சரியான நேரத்தில் செய்யப்படாமல் போக வாய்ப்புள்ளது. இதனால், இந்தத் தொடரில் இந்திய அணி வீரர்கள் ஜெர்சி ஸ்பான்சர் இல்லாமல் விளையாட நேரிடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.