"அரசியல் ரீதியாகப் பேச வேண்டும்" - விஜய்க்கு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அட்வைஸ்!
"பிரிந்திருக்கும் அதிமுக அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பு; தனித்துப் போட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை!" - ஓபிஎஸ்!
உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காகச் சேலம் வந்திருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், செய்தியாளர்களைச் சந்தித்துப் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசினார்.
அதிமுகவில் ஒற்றுமையே வெற்றிக்கு வழி
அதிமுக ஒற்றுமை குறித்துப் பேசிய அவர், "பிரிந்திருக்கும் அதிமுகவினர் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தமிழகத்தில் வெற்றி பெறுகின்ற சூழ்நிலை உருவாகும். இதுதான் என்னுடைய நிலைப்பாடு. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா உருவாக்கிய இந்த இயக்கம், தொண்டர் இயக்கமாகவே தொடர்ந்து செயல்படும். இதை யாராலும் பிளவுபடுத்த முடியாது. இந்த இயக்கத்துக்கு எந்தப் பின்னடைவும் ஏற்படாது" என்று உறுதியாகத் தெரிவித்தார்.
மேலும், எம்.ஜி.ஆர். மற்றும் அம்மா வகுத்துக்கொடுத்த சட்ட விதிகள் கேள்விக்குறியாக உள்ளதால் தான், அதற்காக நீதிமன்றத்தில் போராடி வருவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
விஜய்க்கு அரசியல் நாகரிகம் குறித்து அட்வைஸ்
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசிய கருத்துகள் குறித்துப் பேசிய ஓபிஎஸ், "ஒவ்வொரு கட்சித் தலைவரும் முதலமைச்சராக வர வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆனால், தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் அரசியல் நாகரிகம் கருதிப் பேச வேண்டும், பெருந்தன்மையோடு பேச வேண்டும். அவரின் கருத்துகள் அரசியல் ரீதியானதாக இல்லை. அவர் பேசியதில் சில பேச்சுகள் ஏற்புடையது அல்ல" என்று விமர்சித்தார்.
டிசம்பர் மாதத்தில் கூட்டணி குறித்து முடிவு
தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்கள் உள்ளன. தேர்தல் சமயத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு தெரியும்" என்று பதிலளித்தார். திமுகவின் நான்கரை ஆண்டு கால ஆட்சி குறித்துத் தினந்தோறும் அறிக்கை வெளியிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.