தமிழகத்தில் ஸ்டீல் கட்டுமான நிறுவனம்மீது வருமான வரித்துறை 'அதிரடி' சோதனை!
டெல்லியைத் தலைமை இடமாகக் கொண்ட தனியார் நிறுவனத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகள் காரணமாகச் சோதனை நடவடிக்கை எனத்தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஸ்டீல் கட்டுமான நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா முழுவதும் பிரம்மாண்ட ஸ்டீல் கட்டுமானங்களை மேற்கொண்டு வரும் இந்த நிறுவனம், பல்வேறு மாநில அரசுகளுக்கும் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. சென்னை கிண்டி ஈக்காட்டுதாங்கலில் உள்ள இந்த நிறுவனத்தின் தமிழகக் கிளை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரச் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிறுவனம்மீது வரி ஏய்ப்பு தொடர்பாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சோதனைகள் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.