வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கு: அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவருடைய மகன் செந்தில் குமார் எம்.எல்.ஏவின் இல்லங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, அவரது மகனும் பழனி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஐ.பி. செந்தில் குமார் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடிச் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கை மையமாக வைத்து இந்தச் சோதனைகள் நடைபெறுவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மற்றும் சென்னையில் உள்ள பல இடங்களில் ஒரே நேரத்தில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ், அமலாக்கத்துறையின் சென்னை அலுவலகம் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது. இந்தச்சோதனையின்போதுது, சொத்துக்கள், முதலீடுகள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.