குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு அளித்த முதல்வர் ஸ்டாலின்!
பாஜக கூட்டணி முன்மொழிந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவில்லை; சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு என அறிவிப்பு! அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு முக்கியம் என முதல்வர் விளக்கம்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்மொழிந்த தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு இல்லை என்றும், இண்டியா கூட்டணி முன்மொழிந்த ஆந்திராவைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு என்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதர்சன் ரெட்டியைப் பாராட்டிய முதல்வர், "நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட்டு, குடிமக்களின் உரிமைகள் மற்றும் சமூகநீதியை உயர்த்திப் பிடித்த நீதியரசராக விளங்கிய அவர், தமது பணிக்காலம் முழுவதும் அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைப் போற்றிப் பாதுகாத்தவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக அரசின் நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். "நீட் விலக்கு, கீழடியின் தொன்மையை அங்கீகரிப்பது, நியாயமான நிதிப் பகிர்வு, கல்வி நிதி விடுவிப்பு உள்ளிட்ட தமிழ்நாட்டின் நியாயமான பல கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல், ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்து வருகிறது. மாநில உரிமைகள் பறிப்பு, அதிகாரக்குவிப்பு, வெறுப்புப் பிரச்சாரம், இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பு என அரசியலமைப்பைக் குழிதோண்டிப் புதைக்கும் அநீதிகளுக்கு எதிராக திமுக தொடர்ந்து குரலெழுப்பி வருகிறது" என அவர் தெரிவித்துள்ளார்.
"எனவே, அரசியலமைப்பு, பன்மைத்துவம், சமூகநீதி மற்றும் மொழியுரிமைகளில் நம்பிக்கை கொண்ட சுதர்சன் ரெட்டியை ஆதரிப்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பதாக அமையும்" என்று முதல்வர் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.