அரியலூர் காதல் விவகாரம்: மின்னல் வேகத்தில் இன்ஸ்டாகிராம் காதலனுடன் தப்பிச் சென்ற இளம்பெண்.. நடந்தது என்ன?
அரியலூர் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்த இளம்பெண், தனது காதலனுடன் காரில் "மின்னல் வேகத்தில்" தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் களேபரத்தில், இளம்பெண்ணின் அக்கா மகளான குழந்தை மித்ராவின் காதில் காயம் ஏற்பட்டு, ரத்தம் சொட்டக் கதறி அழுத காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளன.
கீழப்பழுவூர் அருகே உள்ள செங்கராயன் கட்டளை கிராமத்தைச் சேர்ந்த அனுசியா (23), சென்னை மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணிபுரிந்துள்ளார். புதுக்கோட்டையைச் சேர்ந்த குமரேசன் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அனுசியாவை அவரது உறவினர்கள் சொந்த ஊருக்கு அழைத்து வந்து, சின்னப் பட்டாக்காடு கிராமத்தில் உள்ள அக்கா வீட்டில் தங்க வைத்துள்ளனர்.
இந்தத் தகவலை ரகசியமாகத் தனது காதலன் குமரேசனுக்குத் தெரிவித்த அனுசியா, இன்று தனது அக்கா மகள் மித்ராவுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, நண்பர்களுடன் காரில் வந்த குமரேசன் அவரை அழைக்க, அனுசியா காரில் ஏறிக் கிளம்பியிருக்கிறார்.
இதைக் கண்ட அனுசியாவின் அக்கா ஐஸ்வர்யா கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். ஆனால், காரில் வந்தவர்கள் கத்திகளைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்தப் பரபரப்பான சம்பவத்தில், குழந்தை மித்ராவின் காதுப்பகுதியில் கத்தி பட்டு ரத்தம் வர, குழந்தை கதறி அழுதுள்ளது. இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காயம்பட்ட குழந்தை தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம்குறித்து அனுசியாவின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கீழப்பழுவூர் காவல்துறையினர், கார் மற்றும் தப்பிச் சென்றவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.