22 மொழிகளையும் படிக்கத் தயார், ஆனால் திணிக்கக் கூடாது - அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடிப் பேச்சு!
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ், நடைபெற்ற மருத்துவ முகாமினைத் துவக்கி வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "22 மொழிகளையும் படிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால் மொழியைத் திணிக்கக் கூடாது எனக் கடும் ஆவேசத்துடன் பேசினார். அத்துடன், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, டெண்டர் விடுவதில்தான் கவனம் செலுத்தினாரே தவிர, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குக் கவனம் செலுத்தவில்லையெனக் கடுமையாக விமர்சித்தார்.
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் துவங்கி வைக்கப்பட்ட இந்த மருத்துவ முகாமில், இருதய நோய், காசநோய், கண் சிகிச்சை, புற்றுநோய், தோல் சார்ந்த நோய்கள் உள்ளிட்ட 27 மருத்துவத் துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்குப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இந்த முகாமில் கலந்துகொண்ட அமைச்சர், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 11 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும், காச நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களையும் வழங்கினார். மேலும், 5 வயது சிறுவன் ஒருவனின் கால் ஊனத்தையும், 3 வயது குழந்தையின் கன்னத்தில் இருந்த கட்டியையும் கண்ட அமைச்சர், உடனடியாக மருத்துவர்களை அழைத்து அதற்கு உண்டான சிகிச்சைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நான்தான் காரணம் என எந்த ஒரு பெயரையும் எடப்பாடி பழனிச்சாமி எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைத்துக்கூடப் பார்க்கக் கூடாது என ஆவேசமாகப் பேசினார்.