டிரம்ப்-புதின் சந்திப்புக்கு இந்தியா ஆதரவு: வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!
உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முயற்சிக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், இந்தச் சந்திப்பு அமைதியை நிலைநாட்ட வழிவகுக்கும் என இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே அலாஸ்காவில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடக்கவிருக்கும் சந்திப்பை இந்தியா வரவேற்கிறது.
இந்தச் சந்திப்பு உக்ரைனில் நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியை மீட்டெடுக்கும் வாய்ப்புகளை உருவாக்கும். பிரதமர் நரேந்திர மோடி பலமுறை கூறியதுபோல், 'இது போருக்கான காலம் அல்ல எனக் குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக டிரம்ப் நிர்வாகம் இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கு 50% வரி விதித்ததால், இரு நாடுகளுக்குமிடையே பதற்றம் நிலவி வந்தது. இந்தச் சூழலில், உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் இந்த நிலைப்பாடு சர்வதேச அரசியல் அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது. உக்ரைனில் அமைதி திரும்புவதற்கான டிரம்ப்-புதின் சந்திப்பை உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளன.