என் கிட்ட ஏன் வைரமுத்து குறித்து கேள்வி கேட்காதீர்கள்.. செய்தியாளரைக் கடிந்துகொண்ட பாடகி சின்மயி!
சென்னை கந்தன் சாவடியில் உள்ள ஐஸ்வர்யா மருத்துவமனையில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் மையத் திறப்பு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பின்னணி பாடகி சின்மயி, செய்தியாளர் சந்திப்பின்போது பெரும் கோபம் அடைந்து, வைரமுத்து குறித்துக் கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகையாளரைக் கொடூரமாகச் சாடியுள்ளார்.
இந்த விழாவிற்கு வந்த சின்மயி, முதலில் பத்திரிகையாளர்களிடம் தனது வாழ்வனுபவங்கள் குறித்துப் பேசினார். அப்போது, "ஒரே இரவில் வேலை இழந்து தவிப்பவர்களுக்கு இருக்கும் வலி என்ன என்பது எனக்கு நன்றாகத் தெரியும்" என உருக்கமாகப் பேசினார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவுப் பணியாளர்களுக்குத் தான் செய்த உதவி குறித்தும், அவர்களுக்குச் சாலின் போன்றோர் செய்யும் உதவிகள் குறித்தும் விளக்கினார்.
பின்னர், தேசிய திரைப்பட விருதுகள்குறித்து வைரமுத்து தெரிவித்த கருத்துகுறித்து ஒரு பெண் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியபோது, சின்மயி திடீரென ஆவேசமடைந்தார்.
"வைரமுத்து குறித்து என்னிடம் தான் கேட்கணுமா? உலகத்தில் வேறு யாரும் இல்லையா? நீங்கள் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கலாமா? இது தேவையா? கடந்த ஏழு வருடமாக என்னைப் பாடுவதிலிருந்து தடை செய்துள்ளனர். டப்பிங் யூனியனைத் தரமட்டமாக்கியுள்ளனர். அதைப் பற்றி ஏன் யாரும் கேட்கவில்லை?" எனக் கோபத்துடன் கேட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "நான் கோபப்பட்டால், 'சீறினார் சின்மயி', 'சாவடித்தார் சின்மயி' என டி.ஆர்.பி-யை ஏற்றிவிடுவீர்கள்" என ஊடகங்களின் மீது காரசாரமாக விமர்சனம் செய்தார்.
இறுதியில், மார்பகப் புற்றுநோய்குறித்துப் பேசிய சின்மயி, "கேன்சரை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். நவீன மருத்துவ வசதிகள் அதிகமாக உள்ளன. அதே போன்று தலைசிறந்த மருத்துவர்களும் உள்ளனர்" என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.