வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கு: ₹2 கோடி ஏமாற்றிய குற்றவாளி கைது...!
வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ₹2 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ₹2 கோடிக்கும் மேல் மோசடி செய்த வழக்கில், முக்கிய குற்றவாளி ஒருவர் போர்ச்சுகலில் தலைமறைவாக இருந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த 2023ஆம் ஆண்டு, போலந்து நாட்டில் ‘மீட் கட்டர்’ வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சென்னையை சேர்ந்த சைபுதின் ஃபருக் என்பவர் ₹1.25 லட்சம் மோசடி செய்ததாகச் செங்கல்பட்டை சேர்ந்த பத்மநாபன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சைபுதின், ‘சைஃப் இன்டர்நேஷனல்’ என்ற பெயரில், மத்திய அரசின் உரிமம் பெறாமல், போர்ச்சுகல், இத்தாலி, போலந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 193 பேரிடம் ₹2 கோடிக்கு மேல் மோசடி செய்தது அம்பலமானது. இந்த வழக்கில், கடந்த ஜனவரி மாதம் சைபுதின் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த மோசடிக்கு மூளையாகச் செயல்பட்டது ஆந்திராவைச் சேர்ந்த மாகம் வினய் வர்தன் என்பது தெரியவந்தது.
அவரைத் தேடி வந்த நிலையில், அவர் போர்ச்சுகலில் தலைமறைவாக இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து, அவருக்கு ‘லுக்அவுட் நோட்டீஸ்’ பிறப்பிக்கப்பட்டது. மாகம் வினய் வர்தன் போர்ச்சுகலிலிருந்து சொந்த ஊரான நெல்லூருக்கு வருவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சென்னை விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர். பின்னர், மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து, மோசடி பணத்தில் வாங்கப்பட்ட லேப்டாப், ஐஃபோன், ஆப்பிள் வாட்ச், நகைகள் மற்றும் யூரோ பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாகம் வினய் வர்தன், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த மோசடிகுறித்து சென்னை காவல் ஆணையர் அருண் கூறுகையில், “வெளிநாட்டு வேலைக்காக மத்திய அரசின் உரிமம் பெறாத ஏஜெண்டுகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். அப்படி ஏமாற வைக்கும் ஏஜெண்டுகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று எச்சரிக்கை விடுத்தார்.