அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: முன்னாள் அமைச்சர் மருமகன் மற்றும் மகள் கைது!
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ₹2 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில், மறைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மருமகன் பாபு மற்றும் அவரது மகள் சந்தியா ஆகியோரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை, வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த இறைச்சி கடை உரிமையாளர் மகாராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாபு மற்றும் சந்தியா மீது புகார் ஒன்றை அளித்தார். இதேபோல, சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர், தாசில்தார், விஏஓ, உதவி பொறியாளர் போன்ற அரசு வேலைகளை வாங்கித் தருவதாகக் கூறி இவர்கள் இருவரும் மோசடி செய்ததாகப் புகாரளித்திருந்தனர்
விசாரணையில், பரிதி இளம்வழுதியின் மூத்த மருமகன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பாபு, பல அதிகாரிகளுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறி பலரை நம்ப வைத்து ஏமாற்றியது அம்பலமானது. கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம்வரை, அரசு வேலைகளுக்குத் தகுதியைப் பொறுத்து ₹2 லட்சம் முதல் ₹16 லட்சம்வரை பணம் வசூல் செய்து, சுமார் ₹2 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. முன்னாள் அமைச்சரின் மருமகன் மற்றும் மகள் என்பதால், பலரும் இவர்களை நம்பி பணத்தை கொடுத்து ஏமாந்திருக்கின்றனர். பணத்தை திருப்பிக் கேட்கும்போது, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறியுள்ளனர்.
ஏற்கனவே, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்து தருவதாகக் கூறி ₹3.5 லட்சம் மோசடி செய்த வழக்கில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் பாபுவை கைது செய்திருந்தனர். அந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த பாபுவை, தற்போது அரசு வேலை மோசடி வழக்கில் இரண்டாவது முறையாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் அவரது மனைவி சந்தியாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.